என்னா இது ஆச்சர்யமான நிகழ்வு..? நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்து உரையாடிய கிரண்பேடி – நாராயணசாமி!!
புதுச்சேரி என்றவுடன் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான முட்டல் மோதல் தான் அனைவரின் நினைவுக்கு வரும்.புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் தொடர்பாக கடந்த வாரம் முழுவதும் இருவரின் மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், இன்று இருவரும் நேரில் சந்தித்து உரையாடிய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மோதல் போக்கு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாகவே ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. முதல்வரின் உத்தரவுகள், திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் முட்டுக்கட்டை போடுவதே ஆளுநர் கிரண் பேடியின் வழக்கமாக உள்ளதால், இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் வெடிப்பது சகஜமாகி விட்டது. ஆளுநருக்கு எதிராக, தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என முதல்வர் நாராயணசாமி நடத்தாத போராட்டங்கள் இல்லை என்ற அளவுக்கு மோதல் போக்கு நீடித்து வந்தது.
இந்த மோதலின் உச்சகட்டமாக கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தராததும், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த வராததும் பெரும் சர்ச்சையானது. இதனால், பொங்கியெழுந்த முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் ஒப்புதல் இன்றியே பட்ஜெட்டை தாக்கல் செய்தது சர்ச்சையை வலுக்கச் செய்துவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர்.
அரிய நிகழ்வு
ஆனால் இன்று நடந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது என்றே கூறலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று இருவரும் நேரில் சந்தித்து வணக்கம் கூறியபடி உரையாடிய சம்பவம் தான் அந்த அரிய நிகழ்வாகி விட்டது.
கார்கில் போரில் இந்தியா வென்ற நினைவு தினமின்று . இப்போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26-ந் தேதியன்று கார்கில் வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி புதுச்சேரி கடற்கரையில் கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி, சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அதிகாரிகள் பலர் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளுநரும், முதல்வரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அதன் பின் இருவரும் சிரித்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டனர்.
வியப்பு
அப்போது, புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் மற்ற உறுப்பினர்களுக்கு எப்போது பரிசோதனை நடக்க உள்ளது? கிரண்பேடி கேட்டார். மேலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பட்ஜெட்டை நிறைவேற்றியதற்கு பாராட்டும் தெரிவித்தார். உடனே இதற்கு நாராயணசாமி நன்றி தெரிவிக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.







