--- --:--:-- --

கல்வித்துறையில் தொடரும் குளறுபடிகள்? அவசரகதியில் +2 தேர்வு முடிவு ஏன்? கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

8.2

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அவசர, அவசரமாக அரைகுறையாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என கல்வியாளர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். மதிப்பெண் சான்றின் எப்போது கிடைக்கும்? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல் தெரிவிக்காமல் முடிவை மட்டும் அறிவித்துள்ளதே இந்த எதிர்ப்புக்கு காரணமாகியுள்ளது.

 

தமிழகத்தில் குளறுபடியான அறிவிப்புகள், உத்தரவுகள், முடிவுகள் எடுப்பதில் சர்ச்சைக்கு பேர் போன துறையாகவே தமிழக கல்வித்துறை உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய பள்ளிக் கல்வியில், இந்தத் துறையில் அமைச்சர் முதல் உயர் அதிகாரிகளின் அறிவிப்புகள் எல்லாமே முரண்பாடு தான் என்ற அளவுக்கு கடந்த 2 ,3 வருடங்களாக குளறுபடிகளை செய்து வருகின்றனர்.

 

அதுவும் இந்த கொரோனா காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது முதல் தேர்வு நடத்துவது, தேர்வு முடிவு வெளியிடுவது, பள்ளிகளை மீண்டும் எப்போது திறப்பது என்பது வரை முதலில் ஒரு அறிவிப்பு செய்வதும் பின்னர் அதனை மாற்றுவதும் என குளறுபடிகளுக்கு பஞ்சமேயில்லை. இதனால் மாணவர்கள், பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.

 

இதில் இன்று வெளியிடப்பட்ட +2 தேர்வு முடிவுகளிலும் அவசரகதியில் அரைகுறையாக அறிவித்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பொதுவாக பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது? என்பது சில தினங்களுக்கு முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது வழக்கம். முடிவுகள் வெளியாகும் போதே மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? போன்ற அறிவிப்புகளும் தேதியுடன் வெளியாகும்.

 

ஆனால் இந்த ஆண்டு கொரோனாவால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது உண்மைதான். +2 தேர்வுகள் கிட்டத்தட்ட முடிவடைந்து கடைசித் தேர்வு நடத்தப்பட இருந்த மார்ச் 24-ந் தேதி நாடு முழுவதும் திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து சிறப்பு சலுகைகள், பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட போதும், கிட்டத்தட்ட 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுத முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. இவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்த நிலையில் அரசு ஒரு வழியாக ஒப்புதல் தெரிவித்தது.தேதி இழுபறியாக இருந்து வந்த இந்த மறு தேர்வு இம்மாதம் 27-ந் தேதி தான் நடைபெற உள்ளது. மறுதினமே தேர்வுத் தாள் திருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

எனவே 27-ந் தேதிக்குப் பிறகே +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இன்று காலை திடீரென அவசரகதியில், முன்னறிவிப்பு ஏதுமின்றி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தான் பல்வேறு குளறுபடிகள் மீண்டும் அரங்கேறியுள்ளன. காலை 9 மணிக்கு இணையதளத்தில் முடிவு என தமிழக அரசுத் தரப்பில் 8.30 மணிக்கு திடீர் அறிவிப்பு வெளியானது. பின்னர் 9.30 மணிக்கு இணையதளத்தில் முடிவுகளை காணலாம் என அறிவிப்பு செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது.

 

இதில், கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதாவது எழுதிய தேர்வுகளின் முடிவு மட்டும் வெளியிடப்பட்டு, கடைசித் தேர்வின் முடிவு தனியாக பின்னர் வெளியாகும் என்ற அறிவிப்பால் அந்த மாணவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். அத்துடன், மாணவர்கள் தங்கள் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழை பெறுவது எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது?. விடைத்தாளை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்போது என்பது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்ற தேர்வுத்துறையின் அறிவிப்பு தான் கல்வியாளர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பச் செய்துவிட்டது.

 

தேர்வு முடிவை முறையான அறிவிப்புகள் இன்றி இப்படி அவசர கதியில் அரைகுறையாக வெளியிட வேண்டிய அவசர அவசியம் என்ன? பொறியியல் படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பட்டியலை நேற்று அவசரமாக வெளியிட்டு விட்டு மறுநாளே +2 தேர்வு முடிவையும் வெளியிடுவதன் பின்னணி என்ன? கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இப்படி அவசரம் காட்டும் நிலையில், அதற்குள் கொரோனா ஒழிந்து விடுமா? தேர்வு முடிவை இன்னும் 15 நாள் கழித்து முழுமையாக வெளியிட்டால் என்ன குறைந்து விடும்? இப்படி அவசர கதியில் முடிவை வெளியிட்டு மாணவர்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் போது அவர்கள் மேலும் மன உளைச்சலுக்கே தள்ளப்படும் நிலை உருவாகும் என்றெல்லாம் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மேலும் +2 தேர்வு முடிவை அவசரமாக வெளியிட்டதன் பின்னணியில் ஒதோ ரகசியம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை கல்வியாளர்கள் முன்வைத்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon