--- --:--:-- --

அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது ஒரு கிராமம்..!

0.1

சிவகங்கை அருகே மாத்தூர் கிராமத்தை பஞ்சாயத்து கிராமமாக கொண்ட இலந்தங்குடி என்ற கிராமம்தான் அழிவின் இறுதியில் நிற்கிறது. அதிகமான குடியிருப்புகளை கொண்டிருந்த கிராமம். இன்று 15 குடியிருப்புகள் என்றளவில் சுருங்கியுள்ளது. காரணம் வறட்சி, அடிப்படை வசதியின்மை. எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி பெற்றுவிட்ட நிலையிலும் இன்று வரை இந்த கிராமத்தில் குடிதண்ணீர் கிடையாது.

 

2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பாற்றில் தான் குழிதோண்டி தண்ணீர் ஊறும் வரை காத்திருந்து சிறுகச் சிறுக சேகரித்து எடுத்துக் கொண்டு வர வேண்டும். கடல் தண்ணீர் போல் உப்பு தண்ணீரை கொண்ட நிலம் இது. உப்பாற்றில் தண்ணீர் வந்தால் தான் விவசாயம் செய்ய முடியும். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக விவசாயம் இல்லை.

 

கிராமம் முழுவதும் வேலிக்கருவை மரம் நிறைந்து காணப்படும் மிகவும் வறட்சியான பகுதி.
இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை பேருந்து வசதி கிடையாது. எந்தவிதமான அடிப்படை வசதியும் கிடையாது. இதனால் மக்கள் பிழைக்க வழி இல்லாமல் கிராமத்தை விட்டு நகரத்திற்கு வந்து விட்டார்கள்.

கண்மாயும், வயல்வெளிகளும், இடிந்த வீடுகளிலும் வேலிக்கருவை மேலும் பெருகி விட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் விரைவில் இலந்தங்குடி என்ற கிராமம் சிவகங்கை மாவட்ட வரைபடத்தில் இருந்து அழிந்து விடக் கூடிய சூழல் உள்ளது.

 

மாவட்ட ஆட்சியர் அவர்கள் உதவி செய்து வேலிக்கருவை மரங்களை அகற்றி, குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து, ஆழ்துளை கிணறுகள் அமைத்து, விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்கள் பயிரிட பயிற்சிகள் வழங்கி உதவி செய்திட வேண்டும். அங்குள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon