தமிழகத்திற்கு தப்பி வந்துள்ளாரா தங்க கடத்தல் ஸ்வப்னா..!
கேரளாவில் புயலைக் கிளப்பி வரும் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா காரில் தமிழகத்திற்கு தப்பி சென்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் திருவனந்தபுரத்திலிருந்து பாலோடு வழியாக தமிழகத்தில் செங்கோட்டை பகுதிக்கு ஸ்வப்னா சென்றதாக கூறப்படுகிறது.
அவ்வாறு போகும்போது பாலோடு பகுதியில் நிறுத்தி வழி கேட்டு பேசி சென்றதாகவும் காரில் குழந்தைகள் இருந்ததாகவும் அந்த பகுதி வாசியான நந்தினி என்ற பெண்மணி தெரிவித்திருக்கிறார்.நந்தினியோடு ஸ்வப்னா பேசியதை அந்த பகுதி மக்களும் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து ஸ்வப்னா குறித்த தகவல் தமிழக காவல்துறைக்கும் சோதனைச் சாவடிகளுக்கும் பகிரகப்பட்டு உதவி கோரப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை மற்றும் சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்தாம் தேதி டிப்ளமெடிக் பார்சல் என்ற பெயரில் வந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் கேரள விமான நிலையத்தில் பிடிபட்டது.
தங்க கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்வப்னா கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடி பிரிவில் பணியாற்றியவர் என்பதால் கேரள அரசியலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்த கடத்தல் குறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கேரள காவல் துறையும், சுங்கத்துறையும் தேடி வரும் நிலையில் ஸ்வப்னாவின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.







