கமலக்கண்ணன் தன்னிடம் தவறாக பேசவில்லை..! அவர் அண்ணன் போன்றவர்..! அந்தர் பல்டி அடித்த மாணவி..!
சென்னை ராயபுரம் மண்டலத்தில் உதவி செயற் பொறியாளர் ஆக இருந்தவர் கமலக்கண்ணன். இங்கு இது குறித்து வீடு வீடாக பரிசோதிக்க தன்னார்வலராக பணியில் இருக்கும் கல்லூரி மாணவி ஒருவரிடம் கமலக்கண்ணன் ஆசையை தூண்டும் விதமாக ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் கைப்பட எழுதி புகார் அளித்தார்.
கமலக்கண்ணன் பேசிய ஆடியோவும் வெளியானது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உதவி செயற்பொறியாளர் கமலக் கண்ணனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கமலக்கண்ணன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.
அவரைத் தேடி வருவதாக அறிவித்த காவல்துறையினர் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டனர். இந்த நிலையில் ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு காவல் கண்காணிப்பாளர் வழக்கறிஞர்கள் சிலர் உடன் சென்று சம்பந்தப்பட்ட மாணவி சந்தித்து தான் அளித்த பாலியல் புகாரை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார்.
அப்போது உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தனது அண்ணன் போன்றவர் என்றும் அவர் தன்னிடம் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் அவர் தன்னுடைய எதிர்கால திருமண வாழ்க்கை குறித்தும் படிப்புக்கான ஆலோசனைகளை மட்டுமே வழங்கினார் என்றும் தனது செல்போனில் இருந்து குரல் பதிவை வேறு யாரோ மாற்றி வெளியிட்டு விட்டனர் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கமலக்கண்ணன் மீது தான் வாய்மொழியாகவோ எந்த புகாரும் கொடுக்கவில்லை என்றும் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தான் தானாக முன்வந்து செல்போன் மூலம் இந்த சம்பவம் குறித்து விசாரித்ததாகவும் அதில் அந்த அண்ணன் ரொம்ப நல்லவர் என்று கூறியதாகவும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று டைப் செய்யப்பட்ட மனு ஒன்றை அந்த மாணவியின் கையெழுத்து மட்டும் போட்டு வழக்கறிஞர்கள் கொடுத்துள்ளனர்.
அதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக முதலில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அங்கு பார்த்துக் கொள்ளும்படி எச்சரித்து அனுப்பினர்.
இந்த மாணவி கூறியுள்ளபடி செல்போனில் இருந்து ஆடியோவை திருடி வெளியிட்டு விட்டனர் என்றால் அந்த ஆடியோவில் பேசியதே கமலக்கண்ணன் தான் என்பது பரப்பியவர்களுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எதிர்காலத்தை சுட்டிக்காட்டி சிலரால் மிரட்டப்பட்ட அந்த ஏழை மாணவி ஆடியோ குறித்து தெரிவித்த புகாரை மறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.







