சீனா அனுப்பிய ராக்கெட் பாதி வழியில் வெடித்து சிதறல்..!
மிகுந்த நம்பிக்கையுடன் ஏவப்பட்ட சீனாவின் ராக்கெட் பாதிவழியில் வெடித்து சிதறியதால் அந்த நாடு கவலையில் ஆழ்ந்துள்ளது. குவாய்ஸு -11. சுமார் ஒரு டன் எடையுடன் விண்ணுக்குச் செல்லும் திறன் கொண்ட சீனாவின் ராக்கெட். ஜிக்குவான் ஏவுதளத்திலிருந்து 6 செயற்கைக் கோள்களுடன் புறப்பட்டு சென்றது.
விஞ்ஞானிகள் பார்த்து கொண்டிருக்க பாதி வழியில் குறிப்பிட்ட வட்டப்பாதையை அடையும் முன்னரே வெடித்து சிதறியது. முற்றிலும் திட எரிபொருள் கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் பயணம் ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக தள்ளிப்போட்டு வந்திருக்கிறது. சீன விண்வெளி துறையின் துணை அமைப்பான எக்ஸ்ஸ்பேஸ் டெக்னாலஜி இந்த ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி உள்ளது.
ராக்கெட் வெடித்து சிதறியதால் சீனா மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளது. விண்வெளித்துறையில் தோல்விகள் ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். அப்படியிருக்கையில் சீனா ஏன் இதற்காக கவலைப்பட வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். அதற்கும் காரணங்கள் உண்டு. தெற்கு சீன கடலில் அமெரிக்காவின் நிமிட்ஸ், ரொனால்ட் டீகன் போன்ற விமானம் தாங்கி கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன.
சீனாவின் எல்லைக்கு அருகே வந்து நிற்கும் இந்த கப்பல்களை அழிப்பதற்காக டாங் ஃபான் 21
ரக ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக சீனா கூறியது. பயிற்சிகளையும் மேற்கொண்டது. தற்போது சரியான இலக்கை அடைய முடியாமல் வெடித்து சிதறி இருக்கும் குவாய்ஸு -11 ராக்கெட் அடிப்படையில் டாங் போம் 21 ரக ஏவுகணையின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ராக்கெட்டின் முதல் பயணமே தோல்வியில் முடிந்து இருப்பதால் தென் சீனக் கடலில் உள்ள அமெரிக்க கப்பல்கள் விடுத்த மிரட்டல் வீணாக போனதுடன் சீனாவையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.







