--- --:--:-- --

உ.பி.யில் 8 போலீசாரை கொன்ற ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே கைது..!! ம.பி.யின் உஜ்ஜைனி கோயிலில் பிடிபட்டான்

769aa6dc-3865-426a-8466-a320f180edba

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவாக இருந்த ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே பிடிபட்டான். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடச் சென்றவனை அடையாளம் கண்ட கோயில் காவலாளிகள் அவனைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

 

உ.பி.யின் கான்பூரைச் சேர்ந்தவன் விகாஸ் துபே என்ற ரவுடி . இவன் மீது கொலை,கொள்ளை, ஆள் கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இவனைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது இவனது ஆட்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு டிஎஸ்பி உட்பட 8 காவல் துறையினர் உயிரிழந்தனர். மேலும் 8 போலீசார் படுகாயமடைந்த நிலையில், போலீசாரிடம் இருந்த ஆயுதங்களையும் பறித்துக் கொண்டு விகாஸ் துபேயின் ரவுடிக் கும்பல் தலைமறைவாகி விட்டது.

 

உ.பி.யை உலுக்கிய இந்த என்கவுண்டர் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலைகார ரவுடிக் கும்பலை கண்டதும் சுட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதுடன், விகாஸ் துபே பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு எனவும் அறிவித்திருந்தார். இதனால் பல்வேறு தனிப்படைகளை அமைத்து உ.பி.மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

 

இந்நிலையில் உ.பி.யை விட்டே தலைமறைவாகியிருந்த விகாஸ் துபே இன்று காலை மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனியில் பிடிபட்டான். அங்குள்ள பிரபல கோயிலில் சாமி கும்பிட முகக் கவசம் அணிந்த நிலையில் சென்ற அவனை அங்குள்ள வியாபாரி ஒருவர் அடையாளம் கண்டு விட்டார். உடனடியாக கோயில் காவலாளிகளிடம் தகவல் தெரிவிக்க, கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிக்கச் சென்ற காவலாளிகள் மீது விகாஸ் துபே தாக்குதல் நடத்திவிட்டு தப்பப் பார்த்தான். ஆனால் காவலாளிகள் சுற்றி வளைத்து விகாஸ் துபேயை ஒரு வழியாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

 

இதற்கிடையே உ.பி.யின் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த தேடுதல் வேட்டையில் விகாஸ்து பேயின் ஆட்கள் 2 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon