மேட்டுப்பாளையம் : பெண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இருவர் கைது.நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதாக வனத்துறையிறருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து இறந்து கிடந்த யானையின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் வனத்துறை மருத்துவருக்கு பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.வனத்துறை மருத்துவர் பிரேத பரிசோதனையில் இறந்த யானையின் தலையின் இடது காதின் வழியாக ஈயக்குண்டு தாக்கி மூளை சிதறி இறந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டு யானை உயிரிழந்திருக்கலாம் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து யானை இறந்து கிடந்த தோட்டத்தின் உரிமையாளர்களான சகோதரர்கள் தேக்கம்பட்டி இராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ” நேற்றிரவு 4 காட்டு யானைகள் தங்களது விவசாய நிலத்திற்கு வந்தது.அதனையடுத்து தங்களிடம் இருந்த பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முயன்றதாகவும்,யானை விரட்ட முடியாததால் தங்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும்,விளைநிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும், அவர்கள் இருவரும் துப்பாக்கியை மறைத்து வைத்து விட்டு வனத்துறையினரிடம் அப்ரூவர் ஆக வந்துள்ளனர்.இந்த நிலையில் வனத்துறையின் பிரேத பரிசோதனையில் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்ரூவரான இருவரிடமும் நடத்திய விசாரணையில் துப்பாக்கியை பதுக்கி வைத்த இடத்தை காண்பித்ததுடன்,சுட்டு கொன்றது குறித்து நடித்தும் காண்பிக்கப்பட்டது.அப்போது,மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி உள்ளிட்ட வருவாய் துறையினர் பலர் உடனிருந்தனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.இச்சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






