தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் 3940 பேர்… ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1079 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே திடீரென அதிகரித்துள்ளது. இதில் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3500 ஐ கடந்து பதிவாகி வருகிறது. இன்று 3940 என பாதிப்பு பதிவாகி உள்ளது.
இதில் சென்னையில் இன்று மட்டும்1,992 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அதிகபட்சமாக 284 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கணிசமான அளவில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இன்று 3940 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு 82,275ஆக உயர்ந்துள்ளது.. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,443ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 45,537ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் உயிரிழப்பு 54 ஆக பதிவான நிலையில் இது வரையிலான மொத்த பலி எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்து உள்ளது என தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






