விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்!
தமிழகம் முழுவதும் காவல்துறை உயரதிகாரிகளின் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்ததையடுத்து தமிழக காவல்துறை தலைவரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான திரிபாதி அனைத்து காவல்துறை ஆணையர்கள் மண்டல ஐஜிக்கள், டிஐஜிகள் ,அனைத்து காவல்துறை எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படும் சந்தேக நபர்களை விசாரிப்பதற்காக தனி இடத்தை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றும், அதற்கான இடம் அமையவில்லை என்றால் உடனடியாக சரக காவல் நிலையங்களை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
அந்த மையங்களில் விசாரணை கைதிகளுக்கு கொரொனா பரிசோதனை அவசியம் என்றும் விசாரணை கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் முன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்களில் ஜிடி என்று அழைக்கப்படும் முறைப்படி அன்றாட நிகழ்வுகள் பதிவு செய்யப்படவேண்டும்.
கைதானவரை ஒரு நாளைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நிபந்தனை இருப்பதால் தற்போது அறையில் அடைத்து பின்பு நீதிமன்றத்திற்கு வீடியோ மூலம் பதிவு செய்து அனுப்பலாம் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.






