தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த முதியவா் திருவாடானையில் கைது
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக டிமிக்கி கொடுத்து மன்னார்குடியில் பதுங்கியிருந்த செயின் திருட்டு முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியைச் சேர்ந்தவர் தங்கமுத்து,68. இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா பகுதிகளில் திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்த இவர் மன்னார்குடியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தல் படி சார்பு ஆய்வாளர் சித்ரா மற்றும் குற்றப்பிரிவு போலீசார் மன்னார்குடி விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த தங்கமுத்துவை கைது செய்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். தங்கமுத்து மீதான நிலுவை வழக்குகள் குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.






