வீடில்லாமல் தவித்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்டீய ஆசிரியர்களும், மாணவர்களும்!
ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்த வீடு இல்லாமல் தவித்து வந்த ஏழை மாணவிக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து வீடு கட்டிக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
பல எதிர்கால கனவுகளுடன் சாதிக்க நினைக்கும் மாணவியின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்கள் அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும்.
ஒவ்வொரு நாளும் தங்குவதற்கு இருப்பிடம் இல்லாமல் தங்களுக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் ஒவ்வொரு நாள் தங்கி வாழ்க்கையை கழித்து வந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கைகொடுத்து வீடு கட்டிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காணப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நுழைந்தாலே தருவோம் பெறுவோம் என்ற வாசகத்தோடு ஒரு பெட்டியை காண முடியும். இந்த பள்ளியின் உதவும் பண்பை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். அதில் தங்களால் இயன்ற பணத்தை சேமித்து இங்கு படிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் சக ஏழை மாணவர்களுக்கு பல்வேறு பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றன.
அதன் அடிப்படையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த இந்த மாணவிக்கு வீடு இல்லாமல் இருந்த துயரம் தினந்தோறும் வாட்டி வதைத்த நிலையில் ஆசிரியரின் இந்த முயற்சியை தனது எதிர்காலக் கனவை நனவாக்கி உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
பள்ளிப் படிப்பை முடித்து தற்போது அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வந்தபோதும் இந்த மாணவியின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் செயல்கள் பாராட்டுக்குரியது.







