காதலனுடன் பேசிக் கொண்டிருந்ததை பக்கத்து வீட்டு சிறுவன் பார்த்ததால்…அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சொட்ட கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்களான தங்கராஜ், சுமதி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களது இளையமகன் பவனேஷ். தம்பதியர் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.
வியாழக்கிழமை தனது மனைவியுடன் வழக்கம் போல வேலைக்கு சென்ற நிலையில் இரு மகன்களும் சிறுவர்களுடன் குளத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். மதியம் வரை விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் சிறுவன் மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது.
வேலை முடிந்து வந்த தங்கராசு சுற்றுப்பகுதிகளில் சிறுவனை தேடிய பிறகு இரவு ஊத்துக்குளி காவல் நிலையம் சென்ற மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் இரவு முழுவதும் தேடியுள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை பல்லகவுண்டன்பாளையம் குளத்திற்கு ஆடுகளை மேய்க்க சென்றவர்கள் அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் முட்புதருக்குள் சிறுவனின் சடலம் கிடப்பதைப் பார்த்துவிட்டு ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது காணாமல் போன 8 வயது சிறுவன் பவனேஷ் என்பதும், சிறுவனின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்மமான முறையில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து கொலைக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாயமான சிறுவனை சிறுமி ஒருவர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் காதல் வளர்த்து வந்த ஒரு காதல் ஜோடியை பிடித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அந்த பகுதிக்கு கல்லூரி மாணவன் ஒருவன் பள்ளி மாணவியை அழைத்து சென்று காதல் வளர்த்து வந்துள்ளார். இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பார்த்து விட்டதாகவும் இதில் மாணவி சிறுவனின் பக்கத்து வீட்டு சிறுமி என்றும் கூறப்படுகிறது.
சிறுவன் தன்னை பார்த்து விட்டதால் வீட்டில் சொல்லி விடுவான் என்று அந்த சிறுமி காதலனிடம் தெரிவித்ததால் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து சென்று காட்டு பகுதியில் வைத்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலைசெய்து வீசியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
படிக்க வேண்டிய வயதில் காதலை தேடி சென்றதால் அதனை மறைக்க கொலையாளியாக மாறும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






