தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் திட்டம் இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!!
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பின்னர் அமைச்சர்கள் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.
முதலில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தொற்றுக்கு என சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ள கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட இருப்பதாகவும்,அதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தார். கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 280 பேர் சிகிச்சை எடுத்து குணமடைந்து திரும்பி இருக்கின்றனர் என கூறிய அவர்,இங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும்,தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதாக கூறிய அவர்,சென்னையில் இந்த பணிகள் சவாலாக இருந்தாலும் அதை இந்த அரசு சிறப்பாக எதிர் கொண்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து வருபவர்களை அரசு கவனத்தோடு கையாள்கின்றது எனவும், அவர்களை எல்லையிலேயே முழு சோதனை செய்த பின்னரே அனுப்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.

மேலும்,இந்த கொரொனா வைரஸ் புது வகையான வைரஸ் என்பதால் இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது எனவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்று தொடர்பான டேட்டாவை கொண்டு ஆய்வுகள் செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.
மேலும்,மீண்டும் லாக் டவுன் என்ற பேச்சு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவது தொடர்பான கேள்விற்கு, லாக்டவுன் குறித்து மூத்த அமைச்சர்கள்,மருத்துவ குழுவினரை அழைத்து பேசி முதல்வர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.மருத்துவ குழு ஆலோசனை பெற்றே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், புதிதாக பணி நியமனம் வழங்கப்பட்ட மருத்துவர்கள் , பணியாளர்கள் 2814 பேர் பணியில் சேர்ந்து கொண்டு இருக்கின்றனர் என கூறிய அவர், தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சமூகப்பரவல் இருக்கின்றதா இல்லையா என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும் எனவும்,இந்தியாவில் இதுவரை சமூக பரவல் இருப்பதாக எங்கும் சொல்லப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

சென்னையில் கொரொனா தொற்றுக்காக ஏற்கனவே 5000 படுக்கைகள் இருப்பதாகவும் கூடுதலாக 5000 படுக்கைகள் சென்னையில் ஏற்படுத்தப்பட இருக்கின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.20 ஆயிரம் pulse oximeter கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், கூடுதலாக கொள்முதல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், சென்னையில் தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசி அமைச்சர் வேலுமணி, கொரோனா தொடர்பாக தேவையில்லாமல் விஷமத்தனமான புரளிகள் கிளப்பி விடப்படுகின்றது எனவும், சென்னையில் இருந்து நோயாளிகள் யாரும் கோவைக்கு கொண்டு வர படவில்லை எனவும், புரளியை கிளப்புவர்கள் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.






