2 வாரங்களுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டு உடல்!
தன்னால் மூச்சுவிட முடியவில்லை என சொல்லிக்கொண்டே உயிரைவிட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ராய்டின் உடல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவருடைய சொந்த ஊரான ஹூஸ்டனில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் மினியாப்பொலிஸ் நகரில் கடந்த மாதம் 25ஆம் தேதி காவலர் ஒருவர் முழங்கால் கழுத்து இறுக்கியதால் ஜார்ஜ் என்ற அமெரிக்கர் உயிரிழந்தார்.
மக்களுக்கு எதிரான இன வெறியை காட்டுவதாக கூறி அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில் ஜார்ஜ் ஃப்ராய்டின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து தேவாலயத்தில் ஜார்ஜ் உடல் வைக்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தேவாலயத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் 2500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். தேவாலயத்திலிருந்து குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட ஜார்ஜின் தாயின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஜார்ஜ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஜார்ஜை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.
ஜார்ஜின் மரணத்திற்கு காரணமான காவலருக்கு 9 கோடியே 4 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் தனது துப்பாக்கியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.






