10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி..!
கொரொனா நோய் பரவலை கருத்தில்கொண்டு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2019 – 2020 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் பதினொன்றாம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டுப்போன வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்- புதிய பாடத்திட்டம், வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் , தொழிற்கல்வி, கணக்கு, – பழைய பாடத் திட்டம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்தது.
அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு மாண்புமிகு உயர்நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கொரொனா நோய்த் தொற்று அதிகமாக உள்ள நிலையில் தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அரசு ஆய்வு செய்து தற்போதுள்ள நிலையில் கொரொனா தொற்று சென்னையிலும் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று வல்லுநர்கள், நோய்த்தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே பெற்றோர்களின் கோரிக்கைகளையும், நோய்த்தொற்றின் தற்போதைய பதிவுகளையும் கருத்தில் கொண்டு மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க வருகிற 15-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகளும் 11 ஆம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
எனது இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.







