கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் கூறியது என்ன?
கேரளாவில் பெண் யானை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருந்து நிரம்பிய தேங்காயை யானை உண்டதாக தெரிவித்துள்ளார். கேரளாவில் உணவு தேடி ஊருக்குள் வந்த பெண் யானை உயிரிழந்தது நாடெங்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பன்றிகளை விரட்டவே வெடி மருந்து நிரப்பிய தேங்காயை வைப்பது வழக்கம் என்றும் அந்த தேங்காயை யானை உண்டதாகவும் கூறியுள்ளார். இது குறித்து மேலும் இருவரிடம் காவலர்கள் விசாரிக்கின்றனர்.
கேரளாவில் வெடிமருந்து வைத்த பழத்தை உண்டு யானை உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள வனத்துறைக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பெண் யானை இறந்தது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நீதிபதிகள் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் தாஸ்குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு வனவிலங்குகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும் மனித விலங்கு மோதலை தடுப்பது குறித்து ஆய்வு செய்யவும் கேரள தலைமை வன காவலர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டது.
இது போன்ற நிகழ்வுகள் மேலும் நிகழாமல் தடுக்க நீண்டகால நிர்வாக திட்டத்தை ஒப்படைக்குமாறு இக்குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அமைதிப்பள்ளத்தாக்கு வனக்காப்பாளர் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது தீர்ப்பாயம். ஏற்கனவே திட்டம் வகுத்து இருந்தால் அது எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இக்குழு ஒரு மாதத்தில் தன் அறிக்கை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.






