புதுக்கோட்டை சிறுமி கொலை விவகாரத்தில் பெற்ற மகளையே நரபலி கொடுத்த தந்தை!
புதுக்கோட்டையில் பெற்ற மகளை நரபலி கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மூடநம்பிக்கையால் பெற்ற மகளையே தந்தை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் வித்யா.
அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 18 ஆம் தேதி குடிநீர் எடுப்பதற்காக குளத்திற்கு சென்று அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில் குளத்திற்குச் செல்லும் வழியில் உள்ள தைல மரத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு படுகாயங்களுடன் சிறுமி மயங்கி கிடந்தார்.
தன் மகளை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து தைல மர தோப்பில் வீசி விட்டதாக கண்ணீரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பன்னீர்செல்வம் அவரது கண்ணீரில் உள்ள நயவஞ்சகத்தை அறியாமல் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரித்தது காவல்துறை. அதேசமயம் சிகிச்சை பலனின்றி தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தார்.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை தூண்டியது.
காரணம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை என்றது பிரேத பரிசோதனை அறிக்கை. அதனால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

10 நாட்களுக்கும் மேலாக சிறுமியின் கொலைக்கான காரணம் தெரியாமல் காவல்துறை குழம்ப சிறுமியின் தந்தை பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்பின. அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க தன் மகளை தானே கொன்றதை ஒப்புக்கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணத்தை கேட்டு காவல்துறையினரை அதிர தான் செய்தனர்.
மகளை நரபலி கொடுத்தால் செல்வந்தர் ஆகலாம் என மந்திரவாதி ஒருவர் கொஞ்சமும் கூட தயக்கமின்றி பெற்ற மகனையே கொல்லத் துணிந்து உள்ளார் பன்னீர்செல்வம். உறவினர் குமார் என்பவரின் உதவியுடன் தன் மகளை கொன்றுவிட்டு ஏதும் தெரியாதது போல் பன்னீர் செல்வம் நாடகம் ஆடியுள்ளார். சிறுமியின் தந்தை பன்னீர் செல்வத்தையும் அவருக்கு உதவிய குமாரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பேராசையும் மூடநம்பிக்கையும் பெற்ற மகளையே கொல்லுமளவிற்கு மனிதனை மிருகமாக்கி உள்ளது.







