முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வரும் காவல் துறையினர்!
சென்னையிலுள்ள முதலமைச்சர் பழனிசாமி வீடு மற்றும் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 10 மணிக்குள் முதலமைச்சர் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும் தற்போது முதலமைச்சரின் வீட்டில் அருகில் இருந்து பேசுவதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. இதனையடுத்து தொலைபேசியில் பேசிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.







