புதிய மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
புதிய மின்சார திருத்தச்சட்டம் 2020ஐ திரும்ப பெற வலியுறுத்திதிமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் விதமாக மின்சார திருத்தச்சட்டம் 2020 உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கான பொது அதிகாரப் பட்டியலில் மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை வரி விதிக்கும் அதிகாரம் போன்றவை உள்ள நிலையில் புதிய மின்சார சட்டத் திருத்தம் மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை மீறியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மின் ஒப்பந்தம் அமலாக்க ஆணையத்தில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது என்பன உள்ளிட்ட ஆறு அம்சங்கள் மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநில அரசு நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய மின்சார திருத்தச் சட்டம் 2020 ஐ வரை திரும்ப பெற வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் மூலம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அம்சங்களை குறிப்பிட்டு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் , சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, டெல்லி ஆகிய 12 மாநிலங்களின் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கும் ஸ்டாலின், மாநில உரிமைகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கும் திமுகவின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.






