--- --:--:-- --

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை!

13

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அம்பன் புயல் விலகி சென்றதாலும், கத்திரி வெயில் காரணமாகவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

 

அனல் காற்றும் வீசி மக்களை வாட்டியது. இந்த நிலையில், மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கோரிபாளையம், அண்ணாநகர், கேகே நகர், தல்லாகுளம், சிம்மக்கல், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிர்ப்புறம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. அம்மா திடலில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை நீரில் மூழ்கின. தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, குற்றாலம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் சேலம் மாவட்டம் மேட்டூரை சுற்றியுள்ள கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

 

இதேபோன்று நீலகிரி, தேனி, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழை பெய்தபோது உதகை செல்லும் சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை ராயபாளையம் பகுதியில் மழையினால் ஆல மரம் சாய்ந்தது.

 

மின்கம்பம் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலும் கொட்டி தீர்த்த கனமழையால் 6 வழிச் சாலையில் வாகனங்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கும் அளவுக்கு பலத்த காற்று வீசியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon