மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையர் ” திடீர் ” ஆய்வு !!!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 4 ஆம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் 4 முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பூ மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் சமூக விலகல் முறையாக பின்பற்றப்படுகிறா ? என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று ” திடீர் ” ஆய்வு மேற்கொண்டார்.

இதே போல் மத்திய மண்டலத்தில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் சமூக விலகல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது,கடைக்காரர்களிடம் சமூக விலகலை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும்,பூ மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திலும் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் உணவின் தரம்,பொருட்களின் இருப்பு குறித்தும் பணியாளர்களிடமும்,பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது கோவை மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி,மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன்,உதவி ஆணையர்கள் செந்திலரசன்,மகேஷ் கனகராஜ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.






