--- --:--:-- --

பாலியல் மோசடி மன்னன் காசி மீதான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்!

2

கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் காசி மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி புகார்கள் குவிந்து கொண்டே செல்லும் நிலையில் அவர் மீதான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த 26 வயதான காசி என்ற இளைஞர், தொழிலதிபர் போன்று நடித்து பல பெண்களை காதலித்து ஏமாற்றி வந்துள்ளார்.

 

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் அவரது லீலைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பின்னர் காசியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். தோண்டத் தோண்ட கிடைத்த தகவல்கள் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரது லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் 80க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருப்பது உறுதியானது.

 

காசி பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் இனிக்க இனிக்க பேசி அவர்களை தனது வலையில் வீழ்த்தி, பின்னர் அவர்களுடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து அதன்மூலம் மிரட்டி பணம் நகையை பறித்து வந்துள்ளான் என காவல்துறையினர் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும் வகையில் காசியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் இதுவரை 2 முறை காவலில் எடுத்து விசாரித்து உள்ளனர்.

 

இதுவரை சிறுமி உட்பட 5 பெண்கள், ஒரு ஆண் என 6 பேர் காசி மீது புகார் அளித்துள்ளனர். அதன்படி காசி மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் காசிக்கு ஆண்மை பரிசோதனை நடத்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர். இதனிடையே காசியின் பாலியல் மோசடி தமிழகம் முழுவதும் விரிவதால் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்ற கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பரிந்துரை செய்திருந்தார்.

 

இதனை ஏற்று வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே விசாரணை அடிப்படையில் காசியின் கூட்டாளிகளில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றொருவன் வெளிநாட்டில் இருப்பதால் அவனுக்கு எதிராக நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

காசி போன்ற மோசடி மன்னன்கள் நல்லவர்கள் போன்று வேடமிட்டு சமூக வலைதளங்களில் உலா வருவதால் பெண்கள் சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon