மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கக்கோரிய வழக்கு! ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
கொரொனாவை எதிர்த்துப் போராடி வரும் களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
மதுரை சொக்கி குலத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் கொரொனா தொற்றுக் காலத்தில் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் போன்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பாதுகாப்பு உடைகள், முகக் கவசங்கள், கையுறைகள் போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை, திருச்சி, தர்மபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பான புகைப்படங்களை மனுதாரர் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து மதுரை மாநகராட்சியில் உதவி சுகாதார அலுவலர் ஜூன் ஒன்றாம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.






