உத்தரவை மீறி கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள்!
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த கோரி மாணவர்களையும், பெற்றோர்களையும் நிர்பந்திக்க கூடாது என்ற உத்தரவு இருந்தும் பல பள்ளிகள் நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் கடந்த கல்வியாண்டில் செலுத்த வேண்டிய கட்டணத்தையோ, வரும் கல்வியாண்டில் கட்டணத்தையோ செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என அரசாணை வெளியிடப்பட்டது.
எனினும் பல தனியார் பள்ளிகள் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இணையவழி வகுப்புகளுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தனியார் பள்ளிகளால் கோரப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுக்க 12,918 தனியார் பள்ளிகளில் 64 . 81 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தரப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பிறகு கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பல பள்ளிகள் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டன என்பதையே இந்த குறுஞ்செய்திகள் உணர்த்துகின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர் ஒருவரை பள்ளியை விட்டு நீக்கி சம்பவமும் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
விளக்கம் கேட்ட பெற்றோருக்கு சந்தா அடிப்படையில் தமது பள்ளி செயல்படுகிறது என்றும் சந்தா புதுப்பிக்க படாததால் மாணவர் நீக்கப்பட்டதாகவும் பள்ளி நிர்வாகம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையிடம் விளக்கம் கேட்டபோது தங்களிடம் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஆனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தால் எந்தப் பெற்றோரும் புகார் அளிக்க முன்வருவதில்லை என்பது நிதர்சனம்.






