கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை மாதத்திற்கு மாற்ற கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாரியப்பன் ஒரு மாணவியின் தந்தை ஷேக் அப்துல்லா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், பிடி ஆஷா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எப்படி தேர்வு மையங்களை அமைத்து எப்படி தேர்வு நடத்தப் போகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் கொரொனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு நடத்தப்படும் என்று விளக்கம் அளித்தார். இது குறித்து விரிவான விளக்கத்தை ஜூன் 11 ஆம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.