நாயை ஏவி முயலை வேட்டையாடிய கும்பல்! டிக் டாக் மூலம் சிக்கியது!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஒரு டஜன் வேட்டை நாய்களோடு முயல் வேட்டைக்கு சென்று உள்ளனர்.
அங்கு சாமர்த்தியமாய் புதரில் பதுங்கியிருந்த முயல் ஒன்றை வேட்டை நாய்களை ஏவி பிடித்துவர செய்யும் காட்சிகளை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் வேட்டையாடும் வம்சம் என கெத்தாக பதிவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த வனத்துறையினர் முயல் வேட்டைக்கு நாயை ஏவிய மூன்று வேட்டை நாயகர்களையும் பிடித்து விசாரித்து ஆதாரத்தோடு சிக்கியதால் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.
மொத்தமாக 75 ஆயிரம் ரூபாயை அபராதமாக பறிகொடுத்த வேட்டையாடும் வம்ச வாரிசுகளில் நாயால் புத்தி சொல்ல வைத்து டிக்டாக்கில் பதிவிட செய்தனர். தங்கள் வீரத்தை காட்ட காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டால் கையில் முயல் சிக்குகிறதோ இல்லையோ வனத்துறையிடம் வேட்டையாடும் பரம்பரை சிக்கிக்கொள்ளும் என்பதற்கு சாட்சியாக மாறியுள்ளது இந்த சம்பவம்.






