சிறுவனின் மண்டை ஓடு தெரியும் வரை கடித்து குதறிய ராட் வெய்லர் வகை நாய்!
சென்னை ஆவடி அடுத்த மோரைதிருவள்ளூரை நகரை சேர்ந்த 9 வயது சிறுவனான விஷ்ணு வெள்ளிக்கிழமை மாலை தனது தந்தையுடன் கடைவீதியில் நடந்து சென்றுள்ளார். திருமலை நகர் பகுதியில் குமார் என்பவரது வீட்டில் வெளிநாட்டு வகையை சேர்ந்த ராட் வெய்லர் நாய் வளர்க்கப்பட்டு வருகிறது.
சிறுவன் அந்த பகுதியை கடந்து சென்ற போது அந்த வீட்டின் கேட் திறந்து இருந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு கட்டி போடாமல் வைக்கப்பட்டிருந்த நாய் யாரும் எதிர்பாராத வகையில் சிறுவன் விஷ்ணு மீது பாய்ந்து கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
பெரும் போராட்டத்திற்கு பிறகு அக்கம்பக்கத்தினர் சிறுவனை நாயிடமிருந்து மீட்டுள்ளனர். ஆனாலும் கழுத்து மற்றும் தலை பகுதியை குறிவைத்து நாய் கடித்ததில் சிறுவன் விஷ்ணுவின் மண்டையோடு வரை காயம் ஏற்பட்டுள்ளது.
முதலில் அயனம்பாக்கம் அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட விஷ்ணு பிறகு குயின்ஸ் ரோடு அப்போலோவுக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பிற நாய்கள் போன்று அல்லாமல் இந்த ராட்வைலர் வகை நாய்களுக்கு தாடை வலு அதிகம் என்று கூறும் நிபுணர்கள் ஒருவரை கடித்தால் அந்தப் பிடியை தளர்த்த 15 நிமிடங்கள் ஆகும் என்கிறார்கள்.
உரிமையாளரை தவிர அதன் கண்களை நேருக்கு நேராக யாராவது பார்த்தால் கூட கோபம் கொண்டு மூர்க்கத்தனமாக தாக்கும் குணம் உடையது என்று சொல்லப்படுகிறது. இந்த வகை நாய்களை வளர்ப்பதிலும் பராமரிப்பதிலும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.






