சிறு மற்றும் குறு தொழில்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி!
நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி பிணையின்றி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த கடனுதவி மூலம் நாடு முழுவதும் 45 லட்சம் நிறுவனங்கள் பயன் அடையும் என தெரிவித்தார். இந்த கடனை 4 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அக்டோபர் 31 வரை கடன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கடன் பெறும் நிறுவனங்கள் முதல் ஓராண்டிற்கு கடனை திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கடன் உதவியை பெற சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டாம் என்று நிர்மலா கூறினார். நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு 25,000 கோடி ரூபாய் வாராகடன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் கடன் பெற அரசு உதவி செய்யும் எனக் கூறியவர் உத்தரவாதம் அளிப்பதற்காக தனியாக ஒரு நிதி ஒதுக்கப்படும் என்றார்.
குறு தொழில் முதலீட்டு வரம்பு 25 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், நடுத்தர நிறுவனங்களுக்கான பங்கு 10 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சிறு தொழில் முதலீட்டு வரம்பு 5 கோடியிலிருந்து 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிதி 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.






