இராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு! மற்றொரு சிறுவனும் பெண்மணியும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
இராமநாதபுரத்தில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்தது இந்நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஜெப்ரி ரோஹித் ( 5 ) உயிரிழந்தார் . இந்த சம்பவத்தில் மற்றொரு சிறுவன் , பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர் .
இராமநாதபுரம் நகர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவருக்கு இரு மகன்கள் . மூத்த மகன் ஜெப்ரி ரோஹித் , இந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்துவந்தார் . கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக இருப்பதால் வீட்டில் இருந்த இச்சிறுவன் ஜெப்ரி ரோஹித்தும் , இதே பகுதியைச் சேர்ந்த மணீஷ்குமார் ( 10 ) உள்ளிட்டோரும் இன்று மாலையில் எம் . எஸ் . கே . நகர் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது , அருகே புதிதாக கட்டப்பட்டு பூசாமல் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளன.இந்நிலையில்
சுவர் இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் ஜெப்ரி ரோஹித் , மணீஷ்குமார் மற்றும் பிரிசில்லா ( 31 ) என்ற பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.மேலும் இவர்களை அந்தப் பகுதியில் உள்ள மக்கள் இவர்களை மீட்டு இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.இவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்துள்ளனர்.

மேலும் சிறுவன் ஜெப்ரி ரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியில் இறந்துவிட்டதாகத் கூறியுள்ளனர்.படுகாயமடைந்த மணீஷ்குமார் , பிரிசில்லா ஆகியோர் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.






