சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பை பாதியில் விட்ட பழங்குடியின மாணவி!
கோவையில் ஜாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பழங்குடியின மாணவி தவித்து வருகிறார். மழைக்கு ஒழுகும் ஓலை குடிசைகள், நிறைவு பெறாத பசுமை வீடு திட்ட குடியிருப்புகள், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்கள்.கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள ரொட்டி கவுண்டன்புதூர் நிலைதான் இது.
இங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் பழங்குடியின மக்கள் விவசாய தோட்டங்களில் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தாங்கள் வாழும் குறுகலான குடிசையில் குடும்பம் நடத்துவது கடும் சிரமமாக இருப்பதாக இந்த பழங்குடி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டும் அந்த பணிகள் பாதியில் நிற்கின்றன.

6 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறையும் சில மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு முனியப்பன், வசந்தா தம்பதியினரின் 19 வயது மகளான சங்கவி தடைகளை தாண்டி தனியார் கல்லூரியில் சேர்ந்த அவர் சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
சாதிச் சான்றிதழ்களை பெற முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார் சங்கவி. நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதால் அவர்களது கல்வி தடையின்றி கிடைக்கும் வகையில் சான்றிதழ்களை வழங்குவதுடன் பழங்குடியின மக்களின் தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?






