--- --:--:-- --

டாஸ்மாக் திறப்பு ஒரு பக்கம்..! எதிர்ப்பு மற்றொரு பக்கம்..!!

bd07c9b4-063a-4df5-86f9-2b45b47850e7

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்திலும் இதன் தாக்கம் சற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 324 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4829. சென்னையில் மட்டும். மொத்த பாதிப்பு 2328 பேர்.இதுமட்டுமல்லாமல் அரியலூர் 188 , கடலூர் 95, காஞ்சிபுரம் 45, திருவள்ளூர் 34, மதுரை 20, தி. மலை 17 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்று அதிகரிக்கவே நாடு முழுவதும் கடந்த மே 4 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.இந்த நிலையில் தமிழக அரசு இன்று மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் எனவும்,போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு,டாஸ்மாக் ஊழியர்கள் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணியாற்ற வேண்டும்,மது வாங்க வருவோரும் முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்ந தனைகளுடன் மது விற்பனை செய்யப்படும் எனவும் அறிவித்தது.இதனால் ” குடிமகன்கள் ” குஷியடைந்தனர்.

டாஸ்மாக் கடை திறப்பதற்கு திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி போராராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட துவங்கின.இதற்காக காலை 6 மணி முதலே வரிசையில் காத்திருந்த ” குடிமகன்கள் ” கடைதிறந்தவுடன் உற்சாகத்துடன் சென்று மதுவினை பெற்று மகிழ்ந்தனர்.

 

டாஸ்மாக் கடைகளின் சார்பில் மதுபான பிரியர்கள் வரிசையில் சென்று மது பெற்று செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டும்,கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் இருந்தன.கடைகளில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

பெரும்பாலானகடைகள் போதிய சமூக விலகலை கடைபிடித்து வரும் நிலையில்,இராமநாதபுரம் மாவடத்தில், தொண்டி, திருவாடானை,    கோவை மாவட்டத்தில்  மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள திம்மம்பாளையம்,புஜங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள் போதிய சமூக விலகலை கடைபிடிக்கவில்லை.

 

தமிழக அரசு சார்பில் சமூக விலகலை கடைபிடிக்காத கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் ” சீல் ” வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் சமூக விலகலை கடைபிடிக்காமல் பல கடைகள் செயல்பட்டு வருகின்றன.தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்காத ” குடிமகன்களால் ” சற்று அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

 

மேலும்,டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் கருப்புக்கொடி போராட்டமும் நடைபெற்று வருகிறது.

 

அதன்படி கோவை, திருப்பூா் மற்றும் பல்வேறு மாவட்ட பகுதிகளில்    திமுக – வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.போராட்டத்தில்,  சமூக விலகலை கடைபிடித்து  ஈடுபட்டனர்.

ஒரு பக்கம் டாஸ்மாக் கடை திறப்பிற்கு ” குடிமகன்கள் ” குஷியடைந்துள்ள நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் கருப்புக்கொடி போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் # குடிகெடுக்கும் எடப்பாடி என்ற ஹேஸ்டேக்கும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon