கொரோனா பீதி நிறைந்த காலத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது
மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நீட் தகுதி தேர்வு ஜூலை மாதம் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவின் தாக்கத்தால் இம்மாதம் 1ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 26ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல JEE முதன்மை தேர்வு ஜூலை மாதம் 18, 20, 21, 22, 23 ஆகிய நாள்களில் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.
இதேபோல் JEE ADVANCED தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பு மிகுந்த இந்த காலகட்டத்தில் நீட் தேர்வை நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரொனா அச்சத்தால் நாடு மூழ்கி இருக்கும் நிலையில் ஜூலை 26ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருப்பது மாணவர்களை பற்றியோ, அவர்களது பெற்றோர்களை பற்றியோ மத்திய அரசுக்கு துளியும் அக்கறையோ கவலையோ இல்லை என்பதையே காட்டியது என ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நாடு இப்பொழுது இருக்கும் பதற்றமான சூழ்நிலையில் மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும் என்றும் ஸ்டாலின் கேட்டுள்ளார். இந்நிலையில் அடித்தட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு இத்தேர்வை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.






