மே 7 முதல் தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே மாதம் 17ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதும் மத்திய அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது.
அந்த வகையில் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மதுக் கடைகளைத் திறக்கலாம். ஆனால் மதுபான கூடங்களை திறக்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதனையொட்டி கர்நாடகா, ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழக எல்லையை ஒட்டி இருக்கும் மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதால் எல்லைகளை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் திறக்கப்படாது எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது கடைகள் திறக்க வேண்டும். மதுக்கடைகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. இரண்டு நபர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அனைத்து மதுக்கடைகளும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆறு கட்டுப்பாடுகளை பின்பற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.







