பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம்!
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் தமிழக வீரர் வீரமரணம் அடைந்தார். காஷ்மீர் மாநிலம் உத்வாரா அருகே வாங்கம் காஸியாபாத் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான சந்திரசேகர் வீர மரணமடைந்தார்.
தமிழக வீரர் உடன் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஸ்வனி குமார் யாதவ் மற்றும் பீகாரை சேர்ந்த சந்தோஷ் குமார் மிஸ்ரா ஆகிய இருவரும் வீரமரணம் அடைந்தனர். பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் 15 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்தான். உத்வாரா மாவட்டத்தில் 48 மணி நேரத்தில் இரண்டு முறை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முதலாவதாக நடைபெற்ற தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீர மரணம் அடைந்த தமிழக வீரரான சந்திரசேகர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர். கடந்த 2014 ஆம் ஆண்டு துணை ராணுவ படையில் பணிக்கு சென்று சந்திரசேகரனுக்கு ஜெனி மனைவியும், ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
சந்திரசேகர் தற்போது பணியில் இருந்ததால் ஜெனி திருச்சியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். 1989ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பிறந்த சந்திரசேகர் தற்போது நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.
சந்திரசேகரின் தந்தை செல்லச்சாமி தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றியவர் பணியின் போது உயிரிழந்தார்.







