--- --:--:-- --

இணையம் மூலம் திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வரும் மக்கள்!

13

கொரொனா ஏற்படுத்தி தந்த இந்த முழு முடக்கம் மக்களின் பொழுதுபோக்கு முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருக்கும் இடத்தில் இருந்தபடி திரைப்படங்களை பார்க்கும் ஓடிடி முறையின் அசுர வளர்ச்சி இதை உறுதி செய்கிறது. பாரம்பரிய முறையிலான கேபிள்கள், செட்டாப் பாக்ஸ்கள் ஏதுமில்லாமல் இணையதளம் மூலம் நேரடியாக ஊடக சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறையே ஓ‌டி‌டி எனப்படும்.

 

அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஆப்கள் ஓ‌டி‌டி முறையில் இயங்கி வருகின்றன. இன்டர்நெட் வசதி இருந்தால் போதும் ஸ்மார்ட் டிவி களிலும், கணினிகளிலும், மொபைல் போனிலும் திரைப்படங்களை காண முடியும். புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் காண ஆகும் செலவைவிட அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற இணைய ஆப்களில் பார்ப்பதற்கான செலவு குறைவாகவே இருக்கிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

 

தேவைப்படும் நேரத்தில் அந்த படங்களை காண்பதிலும், குடும்பத்தோடு வீட்டிலேயே கண்டுகளிக்கும் வசதிகளும் மக்கள் அளித்த வரவேற்பு இந்த ஓ ஓ‌டி‌டி முறையில் இயங்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி உள்ளன. கொரொனா தடை காரணத்தால் இந்த தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டு இருக்கும். இந்த நிலையில் நகரங்கள் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் மக்கள் பலரும் இந்த ஓ‌டி‌டி வசதியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

 

இணையத்தில் திரைப்படங்கள் பார்க்கும் வசதியை அளிக்கும் நிறுவனங்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் உலகளவில் அசுரவேகத்தில் வருவாய் ஈட்டி இருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் வரவேற்பால் தமிழகத்தில் இதுவரை திரையில் வெளியாகாத புத்தம் புதிய திரைப்படங்களும் நேரடியாக தற்போது ஓ‌டி‌டி முறையில் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் நேரடியாக அமேசான் ஆப்பில் வெளியாக உள்ளது. இதை ஆறரை கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. பெரும் பொருட்செலவு செய்து இதை வாங்கினாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நிறுவனத்திற்கு லாபமே என்கிறார்கள் திரைத்துறையினர்.

 

இதை தொடர்ந்து பல திரைப் படங்களும் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரொனா முடக்க காலத்தில் பார்க்கும் இந்த மாற்றங்கள் பிற காலகட்டத்தில் எப்படி இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon