கொரோனா பரவுவதை சீனா தடுத்திருக்கலாம்!
கொரொனா வைரஸ் பரவுவதை சீனா தடுத்திருக்கலாம் என்றும் இதுதொடர்பாக மிகத் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் கொரொனா வைரஸ் தொடர்பான சீனாவின் செயல்பாட்டில் முழு நம்பிக்கை இல்லை என்றும் கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பு சீனா தடுத்து இருக்கலாம் எனவும் கூறினார்.
சீனாவில் இருந்து கொரொனா பரவியது தொடர்பாக தமது நிர்வாகம் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய நேரத்தில் அது குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறினார். அமெரிக்காவில் கொரொனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கொரொனா தொற்றால் 92 வயது மூதாட்டி குணம் பெற்ற நிலையில் அவரது இளைய மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்ககோட்டாவிற்கு வடக்கே உள்ள சிஸ்கா நகரத்தை சேர்ந்த ஜோவா கினா என்ற மூதாட்டியும் அவரது மகன் மற்றும் 54 வயது பேரன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள ஜோவா கினாவும், அவரது பேரனும் குணம் பெற்று வீடு திரும்பினர். அவர்களுக்கு கைகளைத் தட்டி உற்சாகத்துடன் மருத்துவ ஊழியர்கள் வழியனுப்பி வைத்தனர்.







