--- --:--:-- --

கொரொனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தர தயார்!

1

கொரொனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனக்கு சொந்தமான கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்து தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோய் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

கொரொனா பாதிப்பால் உயிர் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தால் கொரொனா பரவாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள நிலையில் தவறான புரிதலால் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். நோய்தொற்று பாதிப்பால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாக அறிக்கை வாயிலாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 17 வயது சிறுவனின் உடலை அடக்கம் செய்யவிடாமல் ஊர் மக்கள் போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்பியூர் பகுதியில் வசித்து வரும் முகமது நபியின் மகனான 17 வயது சிறுவன் முகமது பிலால் காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

 

மூளை வளர்ச்சி குறைபாடு உடைய அவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முகமது பிலால் கொரொனாவால் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தால் அவருடைய உடலை நம்பியூர் மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அரசு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேறு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon