15 ஆண்டுகளுக்கு பிறகு ஊரடங்கால் ஒன்று சேர்ந்த தாய் மற்றும் மகன்!
15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்து சென்ற நபர் ஊரடங்கு ஏற்படுத்திய சூழலால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தாயுடன் சேர்ந்து இருக்கிறார். 33 வயதாகும் பாண்டியராஜன் தனது தாயையும் சொந்த ஊரையும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறார். இத்தனை ஆண்டு காலமும் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவரை மீண்டும் ஊரை நோக்கி அனுப்பியிருக்கிறது ஊரடங்கு.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த வரலட்சுமி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு மகள்கள் 5 மகன்களை வளர்த்து வந்த இவர் குடும்ப சூழலால் அவர்களை படிக்க வைக்க முடியாமல் வேலைக்கு அனுப்பியுள்ளார். இவர்களில் மூன்றாவது மகனான பாண்டியராஜன் சினிமா ஆசையில் தாயிடம் சொல்லாமல் குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார்.
எங்கு தேடியும் மகன் கிடைக்காத வேதனையில் இருந்த வரலட்சுமி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகளை இப்போதுதான் சந்தித்துள்ளார். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்னைக்கு வந்த பாண்டியராஜன் சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் செங்குன்றத்தில் பழைய பேப்பர் கடையில் வேலை பார்த்துள்ளார். ஆனால் வேலை இல்லாத காரணத்தால் தாயை தேடிமீண்டும் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் சேர்ந்துள்ளார் .
சென்னையில் இருந்து சிறிது தூரம் நடைபயணம் ஆகவும், சிறிது தூரம் லாரிகளிலும் பயணம் செய்து வந்து சேர்ந்த மகன் 15 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் மனதை குளிர வைத்து உள்ளான்.







