கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ” திடீர் ” இடமாற்றம்.சுகாதாரத்துறை செயலர் அதிரடி நடவடிக்கை !!!
கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகனை திடீர் பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இதில் தினந்தோறும் உள்நோயாளிகளாகவும்,வெளிநோயாளிகளாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இவ்வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவர்கள்,தூய்மைப்பணியாளர் என அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஓய்வின்றி இரவு,பகலாக பணியாற்றி வருகின்றனர்.இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்தது.

மேலும்,இவர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்ட சமையல்காரர்கள் கொரோனா அச்சத்தால் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.இதனால் மருத்துவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இவ்விஷயத்தை பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.பீலா ராஜேஷிடம் புகார் தெரிவித்த நிலையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் சென்னைக்கு ” திடீர் ” இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக கோவை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் காளிதாஸுக்கு முதல்வர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்த நிலையில் மருத்துவக்கல்லூரி முதல்வரின் ” திடீர் ” இடமாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் இந்த அதிரடி நடவடிக்கை சுகாதாரத்துறையில் பணியாற்றுவோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்…







