வீட்டை விட்டு வெளியில் வரும் போது முகக்கவசம் கட்டாயம் சென்னை மாநகராட்சி அதிரடி!!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, சென்னை நகரில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் இல்லையேல் கடும் நடவடிக்கை என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இது வரை 1173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை , மயிலாடுதுறை தவிர்த்து எஞ்சிய 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை நகரில் மட்டும் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. சென்னையில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், முகக் கவசம் இன்றி யாரும் வெளியில் வரக்கூடாது என்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் இல்லாமல் வெளியில் வருவோரின் பாஸ் உடனடியாக கேன்சல் செய்யப்படும் என்றும், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு திரும்ப வழங்கப்பட மாட்டாது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள கோவை மற்றும் திருப்பூாிலும், முகக் கவசம் கட்டாயம் என்ற உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர்கள் ராசாமணி, விஜய கார்த்திக்கேயன் இன்று பிறப்பித்துள்ளனர்.







