--- --:--:-- --

“கொரோனா பலி ஒரு லட்சத்தை நெருங்கியது!!” 9 நாளில் 50,000 பேர் உயிரிழப்பு..! அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அதிதீவிரம்!!

1

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் அதிதீவிரமாகி தினமும் உயிரிழப்புகள் கணக்கிலடங்காமல் எகிறி வருகிறது.

 

முதலில் கொரோனா பரவிய சீனாவில் பலி எண்ணிக்கை 3300 என்ற அளவில் கட்டுக்குள் வந்து விட்டது. ஆனால் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஹாலந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இத்தாலியில் பலி எண்ணிக்கை 18, 279 ஆக உயர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அங்கு உயிரிழப்புகள் அதிகரித்தாலும், கடந்த சில நாட்களாக புதிய பாதிப்புகள் குறைந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது. இதே நிலை தான் ஸ்பெயினிலும் உயிரிழப்பு 15447 ஆக அதிகரித்து, புதிய பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

 

ஆனால், பிரான்ஸ் (I2210), பிரிட்டன் (7978), ஹாலந்து (2398), பெல்ஜியம் ( 2523) ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்று இப்போது வேகமெடுத்துள்ளது. இந்த நாடுகளில் வைரஸ் பாதிக்கப் பட்டோரில் 10% மேலானோர் பலியாகி வருகின்றனர். ஆனால் மற்றொரு முக்கிய ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,18,235 ஆக இருந்த போதிலும், உயிரிழப்பு (2067) 2% சதவீதத்திற்கும் குறைவாக ரொம்பவே கட்டுக்குள் உள்ளது.

 

தற்போது கொரோனா வைரசால் சின்னாபின்னமாகி வருவது அமெரிக்கா தான். இங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் 4,68,566 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 16,691 ஆக உயர்ந்து, உலக அளவில் உயிரிழந்தோர் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 3 நாட்களாக தினசரி உயிரிழப்பு 2 ஆயிரம் என உயர்ந்து வரும் நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் இத்தாலியை முந்தி முதலிடத்தை எட்டிவிடும் என்பது நிச்சயம். ஏனெனில் அங்கு தினசரி புதிய பாதிப்பு என்பதும் அதிகமாகியே வருகிறது.

 

உலக அளவில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 47,203 ஆக இருந்த நிலையில் கடந்த 9 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சி புள்ளி விபரமாக உள்ளது.

 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக தினசரி 500-க்கும் மேல் என்ற எண்ணிக்கையில் உயர்ந்து இன்று 6725 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கையும் 227 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும். உயிரிழப்பு 100ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் அதிவிரைவு கொரோனா பரிசோதனைகள் இன்று முதல் தான் பல மாநிலங்களில் தொடங்க உள்ளதால் அடுத்த சில நாட்களில் உண்மையான பாதிப்பு நிலவரம் தெரிய வரும் என எதிர் பார்க்கலாம்.

Leave a Reply

Right Menu Icon