--- --:--:-- --

இவர்களும் மனிதர்கள் தான்…! ஆனால் இப்போது உலகின் கடவுள்கள்…!கொரோனாவுக்கு எதிராக போராடும் உண்மை போராளிகள்!!

fcchc

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொடிய கொரோனா வைரஸ். இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி எனும் எதிரிக்கு எதிரான போரில், போர் வீரர்களாக உயிரை துச்சமென மதித்து களத்தில் நேரடியாக போராடுபவர்கள் மருத்துவர்களும் அத்துறை சார்ந்தவர்கள் தான்.

 

அது மட்டுமின்றி இவர்களுக்கு உறுதுணையாக ராப்பகலாக உழைக்கும் காவல்துறையினர் மற்றும் பல்வேறு அரசுத் துறையினரின் பங்கும் அளவிட முடியாது. இப்போது இவர்கள் தான் கொரோனாவின் பிடியிலிருந்து நம்மை காக்கப் போகும் நிஜமான கடவுள்கள் என்றால் கூட அது மிகையாகாது. இவர்களின் தன்னலமற்ற இந்த அளப்பரிய சேவையை அனைவரும் மெச்சிப் பாராட்ட வேண்டிய தருணமிது.

கடந்த நான்கைந்து நூற்றாண்டுகளாகவே 1720,1820, 1920, இப்போது 2020-ல் கொரோனா வைரஸ் என 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளை நோய் என்ற பெயரில் காலரா, பிளேக், ஸ்பானிஷ் புளூ போன்ற வைரஸ் நோய்கள் உலகை கதறடித்துச் செல்வது வாடிக்கையாகிவிட்டது போலும். ஒரு வகையில் ஜனத்தொகையை கட்டுப்படுத்துவதற்காக இப்படி இயற்கையின் சதியோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. இப்படி சரியாக நூறாண்டுக்கு ஒரு முறை உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி ஜனத்தொகையில் நான்கில் ஒரு பங்கை காலி செய்து விட்டுத்தான் இந்த கொலைகார கொள்ளை நோய்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.

கடைசியாக கடந்த 1918 முதல் 1920 வரை ஒரு வித ஃபுளு காய்ச்சல் உலகை நாடுகளை புரட்டிப் போட்டு சின்னாபின்னப்படுத்தி விட்டுச் சென்றது. அப்போது முதலாம் உலகப்போர் உச்சகட்டத்தில் இருந்த சமயம். இந்த ஃபுளூ காய்ச்சலுக்கு ஸ்பானிஷ் ஃபுளூ என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்போதும் இந்த ஃபுளூ காய்ச்சலுக்கு தப்பாத உலக நாடுகளே கிடையாது. மருத்துவ வசதிகள் முன்னேற்றம் பெறாத அந்த காலகட்டத்தில் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிந்தார்கள். இந்த கொள்ளை நோய் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

 

நாட்டின் சுதந்திரப் போராட்டம் வீரியம் கொண்டிருந்த காலகட்டம் அது. மகாத்மா காந்தியடிகளும் இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல நாட்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இந்த ஸ்பானிஷ் ஃபுளு காய்ச்சலுக்கு அப்போது இரையானவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மில்லியன் கணக்கில் 500 ( ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) அதாவது 50 கோடி பேர் . அன்றைய‍ மொத்த உலக ஜனத்தொகையில் கால் பங்கை கொள்ளை கொண்டு போனது இந்த கொள்ளை நோய்.

இப்போது வந்துள்ள கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று நோயும் லேசுப்பட்டதல்ல என்றே கூறுகிறார்கள் வரலாற்று மற்றும் மருத்துவ நிபுணர்கள். சீனாவின் ஊகான் நகரில் முதலில் பரவிய இந்த வைரஸ் ஒட்டு மொத்த சீனாவை நடு நடுங்க செய்து விட்டது.

 

ஆனால் மருத்துவ முன்னேற்றம் அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு உலகின் சக்தி மிக்க நாடாக திகழும் சீனா, தனது ராணுவம் உள்ளிட்ட அத்துணை பலத்தையும் கொண்டு கொரோனாவை எதிர்த்து போராடியது. 3 மாத காலம் போராடிய சீனா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொரோனாவுக்கு காவு கொடுத்த பின்னரே அதன் பிடியிலிருந்து மீள முடிந்தது. இதற்கு அந்த நாட்டின் மருத்துவர்களின் அளப்பரிய சேவையும், ஹைடெக் தொழில்நுட்ப வசதிகளும் முக்கியக் காரணம்.

சீனாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு மெல்ல கால் பரப்பிய இந்த கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு பரவி, கடந்த 20 நாட்களாக துவம்சம் செய்து, கொத்துக் கொத்தாக மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. மருத்துவத்துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா என உலகின் பணக்கார நாடுகள், கொரோனா வைரசின் பிடியிலிருந்து மீள முடியாமல் முழி பிதுங்கி நிற்கின்றன.

 

ஆனாலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் உயிர்ப்பலி எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் களத்தில் போராடும் மருத்துவர்களின் அளப்பரிய தியாகத்தை போற்ற வேண்டிய தருணமிது என்றால் மிகையாகாது. கொரோனா வைரஸ் தங்களையும் விட்டு வைக்காது என்று தெரிந்தும் உயிரை துச்சமென நினைத்து ராப்பகலாக மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் எத்துனை போராட்டம் நடத்துகிறார்கள் தெரியுமா?

இதில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தவர்களில் இத்தாலியில் மட்டும் 45 மருத்துவர்கள் இதுவரை உயிரை பறிகொடுத்த பரிதாபமும் நடந்தேறி விட்டது. ஏகப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பல நாட்கள் பணி புரிந்த செவிலியர்கள் உள்ளிட்டோரின் முகத்தோற்றமே பரிதாபமாக காட்சியளிக்கிறது மற்றொரு புறம்.

 

இந்தியாவிலும், இப்போது கொரோனா பரவல் பீதி உச்சத்தை தொட்டுள்ளது. மற்ற நாடுகளில் பரவியது போல சமூகப் பரவலாக மாறி விடக் கூடாது என்பதற்காக நமது அரசாங்கங்களும் கொரோனாவுக்கு எதிரான போரில் படு தீவிரமாக இறங்கியுள்ளது. ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டிற்குள் முடங்கச் சொல்லியுள்ளது அரசாங்கம். மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவை வென்றொழிக்க மருத்துவர்களும் , அத்துறை ஊழியர்களும் அரும்பாடுபட்டு வருகின்றனர்.

இதில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மக்கள் பொது வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்பது தான் ஒரே தீர்வு என்பது அனைவருக்கும் நன்கு உணர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு, 144 தடை உத்தரவுகள் எல்லாம் போடப்பட்டுள்ளது. சிகிச்சை களத்தில் உயிரை துச்சமென மதித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர். மற்றொரு புறம், தங்களுக்கு இந்த தொற்று பரவும் அபாயம் இருந்தாலும் மக்களை வெளியே நடமாடாதே என தங்கள் உயிரைப் பணயம் வைத்து காவலர்கள் களத்தில் நின்று சவாலான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஆனால், மக்களில் ஒரு பகுதியினர், கொரோனாவின் கொடூரம் புரியாமல் தங்கள் தேவைக்காகவும், சிலர் வேடிக்கை பார்க்கவும் இஷ்டத்துக்கு பொதுவெளியில் உலா வருகின்றனர். இதைத் தடுக்க காவலர்கள் தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளில், சிலர் மக்களிடம் கை கூப்பி கெஞ்சிக் கூத்தாடி அறிவுரை கூறுகின்றனர். மற்றொரு புறம் லத்தியை சுழற்றினால் தான் கேட்பீர்கள் போலும் என சரமாரி அடி கொடுத்து புரிய வைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட பணியில் ஈடுபட்ட நமது தமிழக காவல் துறை காவலர் ஒருவர், பணி முடிந்து வீட்டிற்கு வந்து, குடும்பத்தினரிடம் இருந்து தம்மை தனிமைப்படுத்திய ஒரு காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் மக்களிடையே பரவிவிடக் கூடாது என்ற அக்கறையில் பாதுகாப்புக்காக ஊரெல்லாம் சுற்றி வந்துள்ளோம்.

 

ஒரு வேளை கொரோனா வைரஸ் தொற்று நமக்கு இருந்தால் என்ன செய்வது? அப்படி ஒரு வேளை நமக்கு தொற்றியிருந்தால் நம் குடும்பத்திற்கு பரவி விடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையில், அந்த காவலர், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு, குடும்பத்தினர் தூரத்தில் நின்று பார்க்க தமது உணவை உண்ணும் காட்சி தான், இப்படிப்பட்ட காவலர்களின் அளப்பரிய பணி எத்தகையது என்பதை ஒரே ஒரு புகைப்படம் மூலம் உணரச் செய்து விட்டது.

எனவே போர் போன்ற இந்த அசாதாரண சூழலில், போர் வீரர்களைப் போல் உயிரை பணயம் வைத்து கொரோவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், அத்துறை அனைத்து ஊழியர்கள், காவல் துறையினர், கூடவே கொரோனாவின் கொடூரத்தை உடனுக்குடன் களத்தில் நின்று தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள செய்தி, ஊடகத்துறையினரை போற்றி பாராட்ட வேண்டிய தருணமிது. இவர்களின் பணியை மெச்சி ராயல் சல்யூட் அடிப்போம்..

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon