--- --:--:-- --

“நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்!!” ம.பி.,யில் பாஜக ஆட்சி அமைக்கிறது!!

7

ம.பி. சட்டப்பேரவையில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவை கூடுவதற்கு முன் அம்மாநில முதல்வர் கமல்நாத் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

ம.பி. அரசியலில் 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் விளையாட்டு இன்று முடிவுக்கு வந்துள்ளது.ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்ததால், கமல்நாத் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

மொத்தம் 230 பேர் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரசின் 114 மற்றும் சுயேட்சைகள் 4, பகுஜன் சமாஜ் 2 , சமாஜ்வாதி 1 என 121 பேர் ஆதரவுடன் ஆட்சி புரிந்து வந்த கமல்நாத் அரசின் பலம் 99 ஆக குறைந்தது .இதனால் சட்டப் பேரவையில் மெஜாரிட்டியை நீருபிக்க ஆளுநர் டாண்டன் உத்தரவிட, கமல்நாத்தோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது; பாஜக வேண்டுமானால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் சந்திக்க தயார் என கூறி விட்டார்.

 

இதனால் பாஜக தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 3 நாட்களாக வாதங்கள் நடந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.இந்த உத்தரவைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் ம.பி. அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறின.

ராஜினாமா செய்த 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் முதலில் ஏற்றிருந்தார். இந்நிலையில் எஞ்சிய 16 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்பதாக நேற்றிரவு சபாநாயகர் பிரஜாபதி அறிவித்தார். தொடர்ந்து காங்கிரசும், பாஜகவும் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கொறடா உத்தரவை பிறப்பித்தன.

 

தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று பிற்பகல் 2 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அறிவித்தார். ம.பி. சட்டப்பேரவையில் ஏற்கனவே 2 இடங்கள் காலியாக இருந்த நிலையில் 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ததால், தற்போது ம.பி. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பலம் 206 ஆனது. மெஜாரிட்டிக்கு 104 பேரின் ஆதரவு தேவை.காங்கிரசின் பலம் கூட்டணி ஆதரவுடன் 99 ஆக குறைந்துள்ள நிலையில், பாஜகவுக் கோ 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை முதல்வர் கமல்நாத்துக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

 

இதனால் சட்டப்பேரவை கூடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு கொடுத்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத்,
பாஜக ஜனநாயகத்தைக் கொன்றுவிட்டது. என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதை நான் தற்காத்துக்கொள்கிறேன். வேற எந்த நம்பிக்கையும் எனக்கு வேண்டாம். இத்தனைக் காலமும் எனக்கான கோட்பாடுகளுடன் அரசியல் செய்து வந்தேன். பாஜகவின் அரசியல் ரொம்ப காலம் வெற்றி பெறாது. பாஜக போல் குதிரை பேர அரசியலில் ஒரு நாளும் நான் பங்கு பெற மாட்டேன். எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் என்னை யாரும் குறை கூற முடியாது. எனது ராஜினாமாவை ஆளுநரிடம் அளித்துள்ளேன் என கமல்நாத் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon