நாளை மறுதினம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! புதிய கட்சி குறித்து ஆலோசனையா..?
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் சென்னையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய கட்சி தொடங்குவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் இந்தக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி அறிவித்து 3 ஆண்டுகளை கடந்து விட்டது. அவர் கூறியபடி 2021 சட்டப் பேரவை தேர்தல் தான் தமது இலக்கு என்பதற்கும் இன்னும் ஓராண்டு தான் இடைவெளி உள்ளது. ஆனால் ரஜினி எப்போது கட்சி தொடங்கப் போகிறார் என்பது புலி வருது.. புலி வருது.. கதையாகத்தான் உள்ளது.
அரசியல் கட்சி தொடங்க ஏதுவாக அவரது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, கொடியை அறிமுகம் செய்து மாநிலம் முழுவதும் பல்வேறு மட்டத்தில் நிர்வாகிகள் நியமனமும் நடந்தேறி விட்டது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில், மன்ற நிர்வாகிகள் யாரும் தேர்தலில் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யவோ ரஜினி தடை விதித்து விட்டார்.

இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் தங்கள் தலைவர் எப்போது கட்சி ஆரம்பிப் பார். நாம் எப்போது அரசியல் பணியாற்றுவது என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கிடக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் வரும் ஏப்ரலில் ரஜினி கட்சியை தொடங்கி விடுவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கேற்றாற் போல் ரஜினியும் கடந்த சில மாதங்களாகவே பொது விவகாரங்களில் கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம், சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய கட்சி தொடங்குவது பற்றி மன்றத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை நடத்துவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், இந்தக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





