சடலங்களை பதப்படுத்தும் ‘பார்மலின்’..மீன்களில் கலக்க கூடாது..கடும் எச்சரிக்கை!
பிரசித்தி பெற்ற மதுரை கரிவேடு சந்தையில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் அங்குள்ள 72 கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 2 டன் மீன்கள், நண்டுகள் உள்ளிட்டவற்றை ஃபார்மலின் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
சவக்கிடங்கில் உடல்கள் கெட்டுப் போகாமல் பதப்படுத்த ஃபார்மலின் பயன்படுத்தப்படுகிறது. பார்மலின் பூசுவதால் மீன்கள் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாது என்றும் புத்தம் புதியதாக காட்சியளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பார்மலின் தடவிய மீன்கள் ரசாயன வாடை வீசாது என்றும் கூறுகின்றனர்.

மீன்களை உட்கொள்வோருக்கு ஒவ்வாமை, வாந்தி, தலைவலி, சோர்வு, மந்தநிலை உள்ளிட்டவை ஏற்படும் என்றும் கிட்னி பாதிப்பு கேன்சர் உள்ளிட்ட அபாயகரமான நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரிவேடு மீன் மார்க்கெட்டில் வெளிமாநில மீன்கள் தரம் குறைந்தும் கெட்டுப்போன நிலையில் இருந்தது கண்டறியப் பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளவும் தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மீன்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




