ஒரு வாரத்தில் தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகும்..! இல.கணேசன் தகவல்!!
தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பதவி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக காலியாக உள்ளது. பாஜக தலைவர் பதவியில் திறம்பட பணியாற்றியதற்காக தமிழிசையை புரமோஷன் கொடுத்து தெலுங்கானா ஆளுநராக்கியது பாஜக மேலிடம் .அதன் பிறகு புதிய தலைவர் பதவிக்கு தமிழக பாஜகவின் பெருந்தலைகள் முதல் குட்டி இளம் தலைவர்கள் வரை பலரும் முட்டி மோதுவதால், அறிவிப்பு வெளியாவது இழுபறியாகியுள்ளது.
இதில் பாஜக மேலிடத்தின் முடிவுப்படி நயினார் நாகேந்திரன், குப்புராமு , கோவை முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தலைவராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றோர் முட்டுக்கட்டை போடுவதே தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பை கட்சி மேலிடம் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.இல.கணேசன் மேலும் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கனவு பலிக்காத விரக்தியில் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். சிஏஏ -க்கு எதிரான போராட்டத்தை தூண்டி விடுவதும் திமுகதான் என்றும் இல.கணேசன் குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




