சிறுமிக்கு உறவினரால் நடந்த கொடூரம்..இறுதியில் மர்ம மரணம்!
உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட 7 வயது சிறுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டார். தமது இரண்டு பெண் குழந்தைகளை தாய் வீட்டில் விட்டுவிட்டு புதுச்சேரியில் பணியாற்றி வந்தார்.
அப்போது மற்றொருவரை காதலித்து மணந்து கொண்டார். இந்நிலையில் தமது பெண் குழந்தைகளை பார்க்க தாய் வீட்டிற்கு சென்ற போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. நெருங்கிய உறவினர்களாலேயே இரண்டு சிறுமிகளும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அந்தப் பெண் தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு புதுச்சேரிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பள்ளி ஆசிரியை ஒருவர் மூலம் இரு சிறுமிகளுக்கும் நடந்த கொடுமை வெளிஉலகிற்கு தெரியவர இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாய்மாமன் உட்பட 15 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 15 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் இரண்டு சிறுமிகளுடன் அவரது தாய் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டார்.
இந்நிலையில் இரண்டாவது மகளான 7 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. கழிவறைக்கு சென்ற அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





