என்எல்சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிந்தது..! “தேங்க் யூ நெய்வேலி” என ரசிகர்களுடன் எடுத்த செல்பியுடன் ‘டுவீட்’ போட்ட விஜய்!!
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நெய்வேலி என்எல்சியில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்று முடிவடைந்தது. ரசிகர்களுடன் நேற்று எடுத்த செல்பியுடன் தேங்க் யூ நெய்வேலி என விஜய் போட்டுள்ள டுவீட் பதிவு படு வைரலாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் கடந்த 5-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந் தேதி வருமான வரி அதிகாரிகள் திடீரென நெய்வேலி வந்து, படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையானது. வருமான வரி அதிகாரிகள் அழைத்துச் சென்ற செய்தி வெளியான பின்னரே விஜய் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தது அவரது ரசிகர்களுக்கே தெரிய வந்தது.
சென்னையில் வருமான வரி அதிகாரிகளின் 24 மணி நேர விசாரணைக்குப் பின், விஜய் மீண்டும் நெய்வேலி திரும்பி மாஸ்டர் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்றார். ஆனால், நெய்வேலி சுரங்கத்தில் விஜய் படப்பிடிப்பிற்கு எப்படி அனுமதி கொடுக்கலாம் என கடந்த 8-ந்தேதி பாஜகவினர் திடீரென போராட்டத்தில் குதித்தது சர்ச்சையானது.
பாஜகவினரின் போராட்டம் குறித்த தகவலறிந்த விஜய் ரசிகர்களும் அங்கு குவிய என்எல்சி நுழைவாயில் முன் மோதல் உருவாகும் சூழல் உருவானது. இதனால் போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை முதலே என்எல்சி முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்து வெளியில் வந்த விஜய், வேன் மீது ஏறி ரசிகர்களை சந்தித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, பல கோணங்களில் செல்பி எடுத்து ரசிகர்களை மேலும் உற்சாகம் செய்தார் விஜய்.
இந்நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்ற தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் , பெருமளவில் என்எல்சி முன் குவிந்து விட்டனர். இதையறிந்த விஜய்யும், படப்பிடிப்பு முடியும் வேளையில் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டார்.
தேங்க்யூ நெய்வேலி என்ற வாசகத்துடன், நேற்று ரசிகர்களுடன் எடுத்த அட்டகாசமான செல்பியையும் பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் ஏக சந்தோஷத்தில் மிதந்ததுடன், விஜய்யின் வருகையையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று தங்கள் மத்தியில் நாலு வார்த்தையாவது பேசுவார் என்றும் கூட ரசிகர்கள் நினைத்தனர்.





