பொங்கல் முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்..! ‘டோல்’களில் பல மைல்களுக்கு வாகன நெரிசலால் அவதி!!
தைப் பொங்கலுக்காக சொந்த ஊர் சென்ற பல லட்சம் பேர் ஒரே நாளில் சென்னை நோக்கி படையெடுக்க, டோல்களில் வாகனங்கள் பல மைல்களுக்கு வரிசை கட்டி நிற்க வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு டோல்களிலும் பல மணி நேரம் தவியோ தவி என தவித்து படாத பாடுபட்டனர்.
தைப்பொங்கலுக்காக கடந்த 10 தினங்களுக்கு முன்பிருந்தே சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றனர். பொங்கலுக்கு முதல் நாள் ஏறத்தாழ 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் சென்றதாக புள்ளி விபரம் கூறுகிறது. இதில் பெரும்பாலோர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்த் கைது .
பொங்கல் முடிந்து சனி, ஞாயிறு விடுமுறையும் வந்ததால் தைப்பொங்கலை கொண்டாடிய மக்கள், நேற்று ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக சென்னைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். சிறப்பு பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் மொத்தமாக படையெடுக்க, தமிழகம் முழுவதும் சென்னை நோக்கி செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதில் ஒவ்வொரு டோல்கேட்களையும் கடப்பதற்குள் பட்ட அவஸ்தை தான் சொல்லி மாளாது. அதுவும் பாஸ்டேக் கட்டாயம் எனக் கூறி அந்த வாகனங்களுக்கு மட்டும் கூடுதல் கவுண்டர்களை வைத்து விட்டு, பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு ஒன்று அல்லது இரு வழித்தடம் மட்டுமே அமைக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல நேரிட்டது.
சென்னையை நெருங்க திருச்சி முதல் அனைத்து டோல்களிலும் வாகன வரிசை பல மைல்களுக்கு நீளத் தொடங்கியது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மேல்மருவத்தூர் போன்ற இடங்களில் 10 கி.மீ.வரை வாகன வரிசை நீள, மணிக்கணக்கில் காத்திருந்து அவதிப்பட்டனர். போலீசாரும் நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறி, கடைசியில் சில டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமலே வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
ஆனாலும் சென்னை புறநகரில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு, நேற்று மதியம் வாகனங்களில் கிளம்பியவர்கள், காலை 9 மணி வரையிலும் நகருக்குள் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகினர். இதனால் வாரத்தின் முதல் வேலை நாளான இன்று பலரும் பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.





